(71) காமராஜரையே தோற்கடிச்சவங்க...
சிவாஜிய தோற்கடிச்சதுல ஆச்சரியமில்ல!
நடிகர் திலகம் நடித்த "மன்னவரு சின்னவரு' படப்பிடிப்பின் போது அவரின் அரசியல் பற்றி அவரிடமே பேசினேன்.
"அண்ணே இன்னொண்ணு சொல்லட்டுமா? 1988ஆம் ஆண்டு "தமிழக முன்னேற்ற முன்னணி'ங்கிற பேர்ல தனியா கட்சி ஆரம்பிச்சீங்க. நீங்க அந்தத் தப்பை பண்ணியிருக்கக்கூடாதுண்ணே. சினிமா வேற, அரசியல் வேறண்ணே'' என்றேன்.
"கரெக்ட்றா. தமிழக மக்கள் நான் நடிச்ச படங்களை நூறு நாள் ஓட வச்சாங்க. வெள்ளி விழா ஓட வச்சாங்க. அரசியல் கட்சி ஆரம்பிச்சேன் என்றேன்... ஓட விட்டுட்டாங்கடா'' என்றார்.
"கட்சி ஆரம்பிச்சது ஒரு தப்பு. ரெண்டாவது தப்பு ஜானகி அம்மாவோட கூட்டணி அமைச்சு தேர்தல்ல போட்டி போட்டது. 1989 தேர்தல்ல ஜானகியம்மா ஆண்டிபட்டியில தோத்தாங்க. நீங்க திருவையாறு தொகுதியில தோத்தீங்க...'' என்று நான் சொன்னதும், அவர் முகம் சட்டென்று வாடியது.
"அண்ணே ஜானகி அம்மா தோத்ததுல எனக்கு அவ்வளவு அதிர்ச்சியா இல்ல. அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் சரி, மக்களும் சரி, ஜானகி அம்மாவை விட ஜெயலலிதா அம்மாவைத்தான் விரும்புனாங்க. அவங்களுக்குத்தான் செல்வாக்கு இருந்தது. ஜெயலலிதாதான் எம்.ஜி.ஆரோட வாரிசுன்னு கூட பேச ஆரம்பிச்சாங்க. இதெல் லாம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். அப்படி இருந்தும் ஜானகி அம்மாவோட கூட்டணி வைக்கலாமாண்ணே...''
அவரிடமிருந்து பதில் வரவில்லை.
"திருவையாறு தொகுதியில சிவாஜி தோக்கலாமாண்ணே'' என்றேன்.
"அரசியலையும் புரிஞ்சுக்கல. தமிழக மக்களை யும் சரியா புரிஞ்சுக்காம விட்டுட்டேன்'' என்றார்.
"அண்ணே தமிழக மக்கள் அப்பவும் உங்களை நேசிச்சாங்க. இப்பவும் நேசிக்கிறாங்க. எப்பவும் நேசிப்பாங்க. ஆனா அரசியல்னு வந்துட்டா தமிழக மக்களோட முடிவே அதிரடியாத்தாண்ணே இருக்கும்'' என்றேன்.
"ஜனங்களை நம்பவே கூடாதாடா?'' என்றார் ஆதங்கத்துடன்.
அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் வேறுவிதமாகச் சொன்னேன்.
"அண்ணே விஜயகாந்த் நடிச்ச "ஏழை ஜாதி' படத்தில் ஒரு சீன் பண்ணுனேன். விஜயகாந்த் மக்களுக்காக பாடுபடறாரு. அவரோட அப்பா விஜயகுமார் அவர்கிட்ட கோபமா பேசுறமாதிரி வசனம் எழுதியிருந்தேன்.''
விஜயகுமார்: ஏண்டா… உனக்கு நாட்டு மக்கள் பெரிசு நான் பெரிசு இல்ல. இந்த நாட்டு மக்களைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? நாடு, நாடுன்னு நாட்டுக்காகவே உழைச்சாரே கர்ம வீரர் காமராஜர். அவரை அவரோட சொந்தத் தொகுதியான விருதுநகர்ல தோக்கடிச்சாங்க. தமிழ், தமிழ்னு தமிழர்களுக்காகவே வாழ்ந்தாரே பேரறிஞர் அண்ணா. அவரை காஞ்சிபுரத்துல தோக்கடிச்சாங்க. ஆண்டிப்பட்டியில கொடைவள்ளல் எம்.ஜி.ஆரோட மனைவிய தோக்கடிச்சாங்க. அந்தக் கட்சி ஜெயிக்க வேணாம். அந்தம்மாவ ஜெயிக்க வச்சிருக்கலாம்ல. அவ்வளவு ஏண்டா கக்கன்னு நேர்மையான மந்திரி இருந்தாரு தெரியுமா உனக்கு. கடைசி காலத்துல கார் கூட இல்லாம பஸ்ஸில ஏறிப் போனாருப்பா. அதையும் இந்த ஜனங்க வேடிக்கை பார்த்துக்கிட்டுதான் இருந்தாங்க. இப்ப அவரையும் மறந்துட்டாங்க. அந்த ஜனங்களுக்காக இங்கு போராடப் போறாராம்...
"இதுதாண்ணே "ஏழை ஜாதி' படத்தில நான் எழுதுன வசனம்'' என்றேன்.
"காமராஜரையே தோக்கடிச்சவங்க. சிவாஜிய தோக்கடிச்சதுல ஆச்சரியமில்லடா'' என்றார். அவருடைய குரலில் கோபம், ஆத்திரம், விரக்தி, வேதனை அத்தனையும் தெரிந்தது. அதையும் தாண்டி காமராஜர் மீது அவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் தெரிந்தது.
பெங்களுரில் படப்பிடிப்பு முடிந்து சென்னை யிலும் தொடர்ந்து நடந்தது. அந்த நாட்களில் எல்லாம் அவரது அன்புப் பிடியில் நான் இருந்தேன்.
படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் ஆரம்பமானது. காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை பேசுவார். முதல்நாள் டப்பிங்கின்போது காலை டிபனுக்கு பிரேக் விட்டேன். டைனிங் டேபிளில் போய் அமர்ந்து நான் சாப்பிட ஆரம்பிக்கும்போது அவரது டிரைவர் முருகன் வந்தார். "ஐயா… உங்களை கூப்பிடறாரு' என்றார். அப்படியே கையைக் கழுவிவிட்டு அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த அறைக்குப் போனேன்.
"அண்ணே கூப்பிட்டீங்களாண்ணே...''
"உனக்கும் சேர்த்துத்தாண்டா வீட்டுல இருந்து டிபன் எடுத்துட்டு வரச் சொன்னேன். வா உக்காரு. இனிமே நான் டப்பிங் வந்தா நீ என்கூடத்தான் சாப்பிடணும்'' என்றார்.
இப்படி நிறைய நெகிழ்வான நிகழ்வுகள் அவருடன்.
சிவாஜி நடித்த "லட்சுமி கல்யாணம்' என்ற படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடல் எழுதியிருப்பார்.
"ராமன் எத்தனை ராமனடி' என்ற பாடல். ஸ்ரீராமனை பல கோணங்களில் வர்ணித்திருப்பார்.
அந்தப் பாடலைப் போல "சிவாஜி எத்தனை சிவாஜியடி' என்று சிந்திக்கத் தோன்றுகிறது. என்னுடைய பார்வையில் அவரை பலவிதமாகப் பாராட்டத் தோன்றுகிறது.
அவருடனான எனது அன்புப் பயணம் நெடிய பயணமாக அமையவில்லை. இறைவன் அவரை விரைவிலேயே அழைத்துக் கொண்டான். ஆனால் அவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என் மனதில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களிலும்.
தமிழ்நாட்டில் அப்பொழுது இருபெரும் திலகங்கள். "மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்., "நடிகர் திலகம்' சிவாஜி. மக்கள் திலகத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டிருக்கிறேன். அவரது ஆசிகளைப் பெற்றிருக்கிறேன்.
நடிகர் திலகத்துக்கு வசனம் எழுதியிருக் கிறேன். அவருடன் சில காலம் வாழ்ந்து அவரது அன்பைப் பெற்றிருக்கிறேன்.
இந்த இரண்டு திலகங்களுக்குப் பிறகு அவர்களின் அடுத்த தலைமுறை போல வந்து தமிழ்த் திரையுலகில் ஜொலித்தவர்கள், ஜெயித்தவர் கள், மக்களின் மனம் கவர்ந்தவர்கள் "சூப்பர் ஸ்டார்' ரஜினி சாரும், "உலக நாயகன்' கமல் சாரும்.
சூப்பர் ஸ்டார் ரஜினி சாரை சந்தித்திருக் கிறேன். பேசியிருக்கிறேன். அவருடைய இரண்டு படங்களில் பணியாற்றுகிற வாய்ப்பை இழந்திருக்கிறேன். ஆனால் நான் பார்க்க ஆசைப்பட்டும், பேச ஆசைப்பட்டும் இதுவரை சந்திக்காமல் இருப்பது கமல் சார் அவர்களை. இத்தனை ஆண்டுகள், அதுவும் அவருடைய சமகாலத்தில் எனது திரைப்பயணம் இருந்தாலும் அவரைச் சந்திக்கவே இல்லை. நான் நினைத்திருந்தால் சந்தித்திருக்க முடியும். அந்தச் சந்தர்ப்பம் அதுவாகவே அமையட்டும் என்று காத்திருந்தேன்... இதுவரை அமையவில்லை.
"களத்தூர் கண்ணம்மா' படத்தில் அவர் சிறுவனாக நடித்தபொழுது, நானும் சிறுவனாக இருந்து பார்த்து ரசித்து வியந்திருக்கிறேன். இன்னும் வியந்து கொண்டுதான் இருக்கிறேன். "உங்களில் ஒருவன்' என்று அவர் சொல்வார். "நம்மில் ஒருவன்' என்று நாடு கொண்டாடி யது. அவரை இப்பொழுதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்னவெல்லாம் தெரியும் என்று பட்டியலிடுவதை விட என்ன தெரியாது என்று கேட்கும் அளவுக்கு பல திறமைகளுக்கு சொந்தக்காரர்.
அப்படிப்பட்ட கமல் சாரை, படத்தில் பணிபுரிவதற்காக அல்ல. தனிப்பட்ட முறையில் கூட நான் பார்த்து பேசிப் பழகவில்லை என்பது நானே வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
ரஜினி சாரைப் பற்றியும், கமல் சாரைப் பற்றியும் நான் இந்த இடத்தில் சொல்வதற்குக் காரணம், அண்ணன் பஞ்சு அருணாசலம் அவர்கள். இருவரின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் பஞ்சண்ணனும் மிகப்பெரிய காரணமாக இருந்தார் என்பது திரையுலகில் உள்ள எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ரஜினி சாருக்கு "முரட்டுக்காளை'யும் எழுதியிருக்கிறார். "ஆறிலிருந்து அறுபது வரை'க்கும் கூட எழுதியிருக்கிறார். கமல் சாருக்கு சகலகலா வல்லவனும் எழுதியிருக்கிறார். அவருடைய "அபூர்வ சகோதரர்கள்' படத்தின் கதையை மாற்றியமைத்து மெருகேற்றி மிகப்பெரிய வெற்றியடைய காரணமாகவும் இருந்திருக்கிறார்.
உதாரணத்திற்காக இரண்டு படங்களை மட்டும் சொன்னேன். ரஜினி, கமல் தவிர பல ஹீரோக்களுக்கு பல வெற்றிப் படங்கள் எழுதியவர்தான் அண்ணன் பஞ்சு அருணாச்சலம்.
அவர் எழுதி தயாரித்து விஜயகாந்த் நடித்து நான் இயக்கிய படம்தான் "எங்க முதலாளி'. அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி ஜெயித்துக் கொண்டே இருப்பவர்கள் எப்பொழுதாவது தோல்வியையும் சந்திக்க நேரிடும். இதில் யாருமே விதிவிலக்கல்ல.
அதைத்தான் நமது முன்னோர்கள் மிக எளிமையாக "யானைக்கும் அடி சறுக்கும்' என்று சொன்னார்கள்.
பஞ்சண்ணன் என்ற யானை "எங்க முதலாளி'யால் சறுக்கியது.
(வளரும்...)